திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.104 திருப்பருதிநியமம்
பண் - பழம்பஞ்சுரம்
விண்கொண்ட தூமதி சூடிநீடு விரிபுன் சடைதாழப்
பெண்கொண்ட மார்பில்வெண் ணீறுபூசிப் பேணார் பலிதேர்ந்து
கண்கொண்ட சாயலொ டேர்கவர்ந்த கள்வர்க் கிடம்போலும்
பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.
1
அரவொலி வில்லொலி அம்பினொலி அடங்கார் புரமூன்றும்
நிரவவல் லார்நிமிர் புன்சடைமேல் நிரம்பா மதிசூடி
இரவில் புகுந்தென் னெழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பரவவல் லார்வினை பாழ்படுக்கும் பருதிந் நியமமே.
2
வாண்முக வார்குழல் வாள்நெடுங்கண் வளைத்தோள் மாதஞ்ச
நீண்முக மாகிய பைங்களிற்றின் உரிமேல் நிகழ்வித்து
நாண்முகங் காட்டி நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பாண்முக வண்டினம் பாடியாடும் பருதிந் நியமமே.
3
வெஞ்சுரஞ் சேர்விளை யாடல்பேணி விரிபுன் சடைதாழத்
துஞ்சிருள் மாலையும் நண்பகலுந் துணையார் பலிதேர்ந்து
அஞ்சுரும் பார்குழல் சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பஞ்சுரம் பாடிவண் டியாழ்முரலும் பருதிந் நியமமே.
4
நீர்புல்கு புன்சடை நின்றிலங்க நெடுவெண் மதிசூடித்
தார்புல்கு மார்பில்வெண் ணீறணிந்து தலையார் பலிதேர்வார்
ஏர்புல்கு சாயல் எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பார்புல்கு தொல்புக ழால்விளங்கும் பருதிந் நியமமே.
5
வெங்கடுங் காட்டகத் தாடல்பேணி விரிபுன் சடைதாழத்
திங்கள் திருமுடி மேல்விளங்கத் திசையார் பலிதேர்வார்
சங்கொடு சாயல் எழில்கவர்ந்த சைவர்க் கிடம்போலும்
பைங்கொடி முல்லை படர்புறவிற் பருதிந் நியமமே.
6
பிறைவளர் செஞ்சடை பின்தயங்கப் பெரிய மழுவேந்தி
மறையொலி பாடிவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
இறைவளை சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பறையொலி சங்கொலி யால்விளங்கும் பருதிந் நியமமே.
7
ஆசடை வானவர் தானவரோ டடியார் அமர்ந்தேத்த
மாசடை யாதவெண் ணீறுபூசி மனைகள் பலிதேர்வார்
காசடை மேகலை சோரவுள்ளங் கவர்ந்தார்க் கிடம்போலும்
பாசடைத் தாமரை வைகுபொய்கைப் பருதிந் நியமமே.
8
நாடினர் காண்கிலர் நான்முகனுந் திருமால் நயந்தேத்தக்
கூடலர் ஆடலர் ஆகிநாளுங் குழகர் பலிதேர்வார்
ஏடலர் சோர எழில்கவர்ந்த இறைவர்க் கிடம்போலும்
பாடலர் ஆடல ராய்வணங்கும் பருதிந் நியமமே.
9
கல்வளர் ஆடையர் கையிலுண்ணுங் கழுக்கள் இழுக்கான
சொல்வள மாக நினைக்கவேண்டா சுடநீ றதுவாடி
நல்வளை சோர நலங்கவர்ந்த நாதர்க் கிடம்போலும்
பல்வளர் முல்லையங் கொல்லைவேலிப் பருதிந் நியமமே.
10
பையர வம்விரி காந்தள்விம்மு பருதிந் நியமத்துத்
தையலொர் பாகம் அமர்ந்தவனைத் தமிழ்ஞான சம்பந்தன்
பொய்யிலி மாலை புனைந்தபத்தும் பரவிப் புகழ்ந்தேத்த
ஐயுற வில்லை பிறப்பறுத்தல் அவலம் அடையாவே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com